Tamil Haiku book 10
#HaikubookReadingMarathon2024
Book 10
நூல்: ஈரம் உறிஞ்சும் முட்கள்
நூலாசிரியர்: சிரா. செல்வகுமார், தஞ்சாவூர்
நூல் வகை: ஹைக்கூ
பதிப்பகம்: நூலேணி பதிப்பகம் 9841236965
பக்கங்கள்:80 விலை₹110/-
இந்த நூலில் நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட கவிதைகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொன்றையும் படிக்கப் படிக்க, ஒவ்வொரு காட்சி நம் கண்முன்னே விரியும். ஒரு கவிதையை வாசித்து முடித்தவுடன் அதன் அடர்த்தியும் ஆழமும் நம்மை வியப்புக்குள் ஆழ்த்துகின்றன. காட்சியின் தெளிவை தன் நுட்பப் பார்வையில் பதிவு செய்து படிக்கிற வாசகனை பரவரசப்படுத்துகிறார்.
குடையில் விழும் மழை
விளிம்பில் இருந்து குதிக்கும்
மேகத் துளிகள்
ஹைக்கூ கவிதையின் வெற்றி என்பது அதன் காட்சிப் படுத்துதலிலேயே இருக்கிறது. அதனால்தான் மட்சுவோ பாஷோவைப் பார்க்க வந்த ஒரு பெண் கவிஞர், தான் எழுதிய கவிதைகளை காட்டினார். ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டே வந்த பாஷோ எதிலும் முழு திருப்தி அடையாமல் இருந்தார். குயில் பற்றி எழுதச் சொல்லி அனுப்பினார்.
தன் இல்லம் வந்த அந்தப் பெண் கவி, இரவு முழுவதும் எழுதி எழுதி பார்த்தார், எதிலும் உயிரோட்டம் இல்லை. கண் விழித்துக் கொண்டே இருக்க இரவு முடிந்து விடியத் தொடங்கியது. அப்போது அவர் தோட்டத்தில் குயில் கூவத் தொடங்கியது. அதைக் கேட்ட மாத்திரத்திலேயே ஒரு கவிதை எழுதினார். அதைக் கொண்டு வந்து பாஷோவிடம் காட்டினார். “இதுதான் கவிதை; இதுதான் காட்சி” என வாழ்த்தினார் பாஷோ.
அப்படி ஒரு காட்சியை மிக எளிதாக நமக்கு காட்டுகிறார் செல்வகுமார். முதல் இரண்டு வரிகளைப் நிறுத்தி நிதானமாகப் படிக்கும் போது நமக்கு ஒரு காட்சித் தோன்றும்; ஆனால் மூன்றாவது வரியைச் சேர்த்துப் படிக்கும்போதுதான், “அட! இப்படி ஒரு காட்சியா?!” என வியப்பின் உச்சத்திற்கு கொண்டு போகும். நீங்களும் இதை படிக்கும்போது உணர்வீர்கள்.
வெப்பமாய்க் குளம்
கையில் அள்ளிய நீரில்க்
குளிரும் சூரியன்
இரவு முழுக்க நிலவொளியில் குளிர்காய்ந்த குளம், அதிகாலை சூரியக் கதிரில் லேசாக சூடாகி, நன்பகலில் வெப்பத்தின் உச்சியில் இருக்கும். இது அன்றாடம் நடக்கும் நடைமுறைதான் என்றாலும், அந்த வெப்பச் சூரியனையும் கைகளால் அள்ளும் போது எந்நிலை மாறும் என்பதை கவிஞரின் அனுபவக் கோட்பாட்டில் பதிவிடுகிறார்.
கருத்துகள்
கருத்துரையிடுக